Labels

Sunday, May 31, 2015

கேழ்வரகு


undefined
கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு.
சிறிய தானியமானாலும், இதில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில், அதிகமாக உட்கொள்ளப்படும் தானியங்களில் கோதுமை, அரிசி தான். கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடுகையில், கேழ்வரகில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில், அத்தியாவசிய தாதுக்கள் காணப்படுகின்றன. கேழ்வரகில், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது.
இதுவே, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு. ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை, குறைக்க வல்லது எனவும், அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதோடு இதில் உள்ள, டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம், உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்து செயலாற்றுகிறது. மேலும் இதில் காணப்படும், அதிகப்படியான நார்ச்சத்து, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இது வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் உகந்த உணவாகும்.
சைவ உணவுகளில், கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு, மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை, விரைவில் குணமாக்க வல்லது இந்த கேழ்வரகு. கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும், அதிகப்படியான கொழுப்பை குறைக்கின்றன. மேலும் இதிலுள்ள தெரோனைன் கொழுப்பு ஏற்படுவதை தவிற்கிறது.
கேழ்வரகில் எந்த சைவ உணவிலும் இல்லாத அளவில் இரும்புச்சத்து காணப்படுகிறது. இரத்த சோகை போக்க இது மிகவும் ஏற்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடல் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. கேழ்வரகின் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு பண்பு, பொதுவாகவே உடலை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால், டென்ஷன், மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி, இன்சோம்னியா போன்றவற்றை தவிர்க்க இது உதவுகிறது. கேழ்வரகில் மனித உடலிற்கு நன்மை செய்யும், பல அமினோ அமிலங்கள் உள்ளன.
இதிலுள்ள ஐசோலியூசின் உடலில் சிதைவடைந்த திசுக்களை குணப்படுத்தவும், ரத்தம் உருவாகவும், எலும்புகள் உருவாகவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மெதியோனைன் வேறு எந்த தானியத்திலும் காணப்படாத ஒரு இன்றியமையாத அமினோ அமிலமாகும். இது கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், சல்பர் சத்தை கொடுக்கவும் வல்லது. இவ்வாறாக பல நோய்களை குணப்படுத்தும், ஈடுஇணையற்ற கேழ்வரகு நமக்கு எளிதில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment