Labels

Sunday, July 29, 2012

சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ரத்த நாளம்

Posted On July 29,2012,By Muthukumar
சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் என்னும் அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் `டாலி' என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட போது உலகமே அல்லோல கல்லோலப் பட்டுப்போனது. அதன்பிறகு குளோனிங் மூலம் ஆடு மட்டுமல்ல மனிதர்களையும் கூட உருவாக்கி விடலாம் என்றார்கள்.
சரி, அதனால் என்ன பயன்? என்று யோசித்தபோது குளோனிங் மூலம் ஏற்படக்கூடிய பலன்களை விட ஆபத்துகளே அதிகம் என்று தெரியவந்தது.
அதன் விளைவாக, உலக நாடுகளில் குளோனிங் செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால் குளோனிங் மூலம் ஏற்படக்கூடிய பலன்களும் ஏராளம் என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, ஒருவருடைய உடல் பாகங்கள் பழுதடையும் போது அவர்களுடைய குளோனில் இருந்து அந்த பாகத்தை எடுத்து நோயாளிகளுக்கு பொருத்திக் கொள்ளலாம்.
துரதிஷ்டவசமாக, குளோனிங் தடை செய்யப்பட்டதால் குளோன் உடல் பாகங்களை பயன்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பும் கைவிட்டுப் போனது. ஆனால் சற்றும் மனம் தளராத ஆய்வாளர்கள், குளோனிங் போன்ற, ஆனால் ஆபத்துகள் குறைந்த மற்றொரு சுலபமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள்.
ஒருவருடைய ஸ்டெம் செல்களில் இருந்து அவருடைய உடலின் சில பாகங்களை சோதனைக்கூடத்திலேயே உற்பத்தி செய்யும் அட்டகாசமான உயிர்த்தொழில்நுட்பம்தான் அது! இந்த தொழில்நுட்பத்துக்கு `திசு பொறியியல்' (டிஷ்யூ என்ஜினீயரிங்) என்று பெயர்.
இந்த ஸ்டெம் செல் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ரத்த நாளம் ஒன்று, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்து வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. மனித உடல் பாகங்களை நோயாளிகளுடைய ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்து, அதனைக் கொண்டு உயிரைக் காக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது உலகில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனைச் சேர்ந்த அந்த சிறுமியின் கல்லீரலுக்குச் செல்லும் ரத்த நாளத்தில் மோசமான அடைப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் நோயாளியின் உடலில் உள்ள வேறொரு ரத்த நாளத்தை பயன்படுத்துவது அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் ஸ்வீடன் நாட்டு மருத்துவ ஆய்வாளரான சுசித்ரா சுமித்ரன் ஹோல்கர்சன், அந்த சிறுமிக்காக ஒரு புதிய ரத்த நாளத்தை உற்பத்தி செய்வது என்று முடிவு செய்தார்.
முதலில், இறந்துபோன ஒருவருடைய உடலில் இருந்து 9 செ.மீ. நீளமுள்ள ரத்த நாளத்தை எடுத்து அதிலிருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. பின்னர் சிறுமியின் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கொண்டு மில்லியன் கணக்கான உயிரணுக்கள் வளர்க்கப்பட்டன. அதன்பிறகு உயிரணுக்களற்ற 9 செ.மீ. ரத்த குழாய் முழுவதையும் உயிரணுக்கள் கொண்டு நிரப்ப ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டு வாரங்கள் தொடர்ந்த இந்த ஆய்வின் இறுதியில், நாள மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான ரத்த நாளம் தயாரானது. பிறகு, இந்த புதிய ரத்த நாளம் அந்த சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது.
இதில் விசேஷம் என்னவென்றால், பொதுவாக உடல் பாக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளை, இந்த சிறுமி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதுதான்! ஏனென்றால் இந்த ரத்த நாளம் பிறரிடம் இருந்து கடன் வாங்கப்பட்டது அல்ல. அந்த சிறுமியின் சொந்த ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது!
முக்கியமாக, இந்த நாள மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுமி சுமார் 6 செ.மீ. உயரம் வளர்ந்திருப்பதாகவும், எடை கூடியிருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னர் சோர்வாகவும், பள்ளி செல்லாமலும் இருந்த அந்த சிறுமி, சிகிச்சைக்கு பின்னர் ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கிறார் என்கிறார்கள் சிறுமியின் பெற்றோர்!
சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் டாலர் வரை செலவாகும் இந்த தொழில் நுட்பம், நாளங்கள் போன்ற சிறிய உடல் பாகங்களை உற்பத்தி செய்வதற்கு மிகவும் சிறந்தவை என்கிறார் மற்றொரு மூத்த ஆய்வாளர் அந்தோனி அடாலா. அதேசமயம், இந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு மோசமான பின்விளைவுகள் எதுவும் ஏற்படுகின்றனவா என்று வருடக்கணக்கில் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கிறார் அடாலா!
சோதனைக்கூடத்தில் உருவாக்கப்படும் ரத்த நாளங் களை டயாலிசிஸ் மற்றும் இதய அறுவை சிகிச்சை போன்றவற்றிற்காக உடலின் எந்த பாகத்திலும் பயன்படுத்தலாம் எனும் அறிவியல் உண்மையை உறுதிப்படுத்தும் இந்த ஆய்வு சந்தேகமில்லாமல் ஒரு வரப்பிரசாதமே!
`சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உடல் பாகங்களை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இனியும் சயின்ஸ் பிக்ஷன் அல்ல. இன்னும் 5 வருடங்களுக்குள் அதிகமான நோயாளிகள் சோதனைக்கூட ரத்த நாளங்களை பயன்படுத்துவார்கள் என்பது கண்கூடு' என்கிறார் யேல் பல்கலைக்கழக மருத்துவர் லாரா நிக்லாசன்.

No comments:

Post a Comment