Labels

Showing posts with label தைராய்டு. Show all posts
Showing posts with label தைராய்டு. Show all posts

Sunday, May 31, 2015

தைராய்டு

Posted By Muthukumar,On May 31,2015
THYROID
1.தைராய்டு என்பது என்ன?:
நமது உடம்பில் பலவிதமான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி , அந்த செலகளை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும் ‘தைராய்டு ‘ சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன.இது சுரக்கும் ஹார்மோனின் பெயர் ‘ தைராக்ஸின்’.
2. தைராய்டு சுரப்பியின் பயன் என்ன?:
இதயத்தை சீராக வைக்க உதவுகிறது. இனப் பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகின்றது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், ‘தைராக்ஸின்’ ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
3.தைராய்டு குறைபாடு எத்தனை வகை?:
தைராய்டு குறைபாட்டில் இருவகை உள்ளது. ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது.மற்றொன்று -தைராய்டு குறைவாக சுரப்பது.
4.தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?:
முடி உதிர்தல், மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதைவிட வித்தியாசமாக இருக்கும்.மாதவிடாயில் பிரச்சினை, கழுத்து வீக்கம், மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மனக் கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும்.
5. தைராய்டின் பாதிப்புகள் என்ன?:
அதிகமாக தைராக்ஸின் சுரந்தால் எடை குறையும். இதயத் துடிப்பு அதிகமாகும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள்,குழந்தையின்மை, வயிற்றுப் போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். தைராக்ஸின் குறைவாக சுரந்தால், மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவது, அதிகமான முடி உதிர்வது, மலச் சிக்கல், உடல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
6. தைராய்ட் பிரச்சினை உள்ளோர், தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?:
தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்சினை இருந்தால், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காளி ஃப்ளவர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது.
7. தைராய்டு காரணத்தால்தான் கழுத்துப் பகுதி வீக்கமடைகிறதா?:
தைராய்டு சுரப்பியின் செயல்பாடு, முறையாக இல்லாதபோது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.சில நேரங்களில் அயோடின் குறைபாட்டாலும் கழுத்து வீக்கம் ஏற்படலாம்.
8. தைராய்டு பிரச்சினை இருந்தால், மூட்டுகள் வலிக்குமா?:
மூட்டு வலி மற்றும், கடுமையான உடல்வலி போன்றவை தைராய்டு பிரச்சினைக்கான அறிகுறிகள்தான். அதோடு, தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடு, உடலில் ஆங்காங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.
9. தைராய்டு சுரப்பியில் கட்டிகள் வருமா?:
ஆம்!. தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு. அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம்.இது மட்டுமில்லாமல், தைராய்டு சுரப்பியில் நேரடியாகக்கூட புற்றுநோய்க் கட்டிகள் வரும்.
10. தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியுமா?:
பொதுவாக, மக்களுக்கு வரக்கூடிய குறைபாடு, தைராக்ஸின் குறைவாக சுரப்பது. இக்குறைபாடு ஒருமுறை வந்துவிட்டால், தைராக்ஸின் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடவேண்டும்.ஆனால், தைராக்ஸின் அதிகமாக சுரந்தால், மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாகக் குணப்படுத்தலாம்.